உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 43-வது லீக் போட்டியில், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி மஷ்ரஃபி மோர்தஸா தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொண்டது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய ஃபகர் ஸமான் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு இமாம் உல் ஹக், பாபர் அஸாம் ஆகியோர் வங்கதேசத்தின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர்.
2-வது விக்கெட்டுக்கு 157 ரன்கள் சேர்த்த நிலையில், பாபர் அஸாம் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது. வங்கதேச தரப்பில் முஸ்தஃபிஸூர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
316 ரன்களை இலக்காக கொண்டு வங்கதேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தமிம் இக்பால், 8 ரன்னிலும், சவும்யா சர்கார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களம் இறங்கிய ஷகிப் அல் ஹசன் நிதானமாக ஆடி அரைசதம் அடித்த நிலையில், 64 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து களம் இறங்கிய வங்கதேச வீரர்கள் பாகிஸ்தானின் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால், 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த வங்கதேசம் 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், பாகிஸ்தான் வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறியது. சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷஹீன் ஷா அஃப்ரிடி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Discussion about this post