ஒழுங்காக வருமானவரி செலுத்துபவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு, விமான நிலையங்கள், சுங்கச் சாவடிகள் போன்றவற்றின் வரிசைகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் பெயரை முக்கிய கட்டடங்கள் மற்றும் இடங்களுக்கு சூட்ட வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்துள்ளது. அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…
மத்திய அரசின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கே.வி.சுப்ரமணியன் தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வரலாற்றில் முதன்முறையாக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இப்போது இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை இந்த ஆய்வறிக்கை அலசி ஆராய்ந்து உள்ளது. மக்களில் சிலர், தான் கட்டும் வரியால் தனக்கு எந்த பலனும் கிடைப்பது இல்லை என்று கருதுவது வரி ஏய்ப்பை ஊக்குவிப்பதாக உள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இதனால் ‘எனது வரிப்பணம் செயலாற்றுகிறது’ என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம், வரிகட்டுபவர்களின் மகிழ்ச்சியே வரி ஏய்ப்பைத் தடுக்கும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.
இதனால் ஒழுங்காக வரிகட்டுபவர்களுக்கு விமான நிலையங்கள், சுங்கச் சாவடிகள், அதிவேக சாலைகள் ஆகியவற்றில் முன்னுரிமை வரிசைகளை அமைக்கலாம் என்றும், இவற்றின் மூலம் அவர்களை அரசல் பெருமைப்படுத்த முடியும் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
ஊர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களில் ஒழுங்காக வரிகட்டுபவர்களைப் பற்றி குறுஞ்செய்திகள், அல்லது விளம்பரப் பலகைகள் மூலம் அறிவிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒழுங்காக வரிகட்டும் முதல் 10 பேரைக் கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமைகளை அளித்து கவுரவிக்க வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
தேசத் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியவர்களின் பெயர்கள் கட்டடங்கள் மற்றும் பொது இடங்களுக்குச் சூட்டப்படுவதைப் போலவே, தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒழுங்காக வரிகட்டி வருபவர்களின் பெயர்களையும் அரசு தனது கட்டடங்கள், சின்னங்கள், சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சூட்டலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
வரி ஒழுங்காக வரி கட்டுவது என்பது பெருமைக்கு உரியது என்று மக்கள் உணர வேண்டும் என்பதே இந்தப் பரிந்துரைகளின் நோக்கமாக உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையின் இந்தப் பரிந்துரைகள் ஏற்கப்படுமா? அதற்கான சாத்தியங்கள் என்ன? என்பது இனிதான் தெரியவரும்.
Discussion about this post