நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரத்தை இந்தியாவுக்கு அளிக்கும் வகையிலான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி உள்பட 29 நாடுகள் உள்ளன. உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ரீதியிலான உறவை வலுப்படுத்துவதையும், ஆயுதங்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவுக்கு நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கு நேட்டோ நாடுகளுக்கு இணையான அங்கீகாரம் வழங்க செனட் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
செனட் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, பிரதிநிதிகள் அவைக்கு அனுப்பப்படவுள்ளது. அங்கு விரைவில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இந்தியாவுடன் ஆயுதங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதோடு நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இணையாக இந்தியாவுக்குப் பாதுகாப்பு ரீதியிலான உதவிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post