உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 39 வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்ட இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 39 வது லீக் போட்டியில், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி, ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கருணரத்னே , குசால் பெரேரா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில், கருணரத்னே 32 ரன்களிலும், பெரேரா 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின் களம் இறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அதிரடியாக ஆடி சதமடித்த நிலையில், 104 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதைதொடர்ந்து களம் இறங்கிய வீரர்களின் கணிசமான ரன் குவிப்பால் இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் அம்ப்ரீஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய கிறிஸ் கெயில் 35 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களம் இறங்கிய நிகோலஸ் பூரன் இலங்கையின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கிய ஃபாபியன் ஆலன் அதிரடியாக ஆடி 51 குவித்து ஆட்டமிழந்தது. ஆலன் ஆட்டமிழந்ததும், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து களம் இறங்கிய மேற்கிந்திய வீரர்கள் இலங்கையின் பந்து வீச்சில் அடுத்தது ஆட்டமிழந்தனர். பூரன் 118 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் 315 மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையின் ஃபெர்னாண்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Discussion about this post