ராமநாதபுரம் ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடிநீர் குழாய்களில் இருந்து, சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 39 மின் மோட்டார்கள், நகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டன. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து, குடியிருப்புகளுக்கு குழாய் அமைத்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய்களிலிருந்து முறைகேடாக மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. புகாரைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ராமேஸ்வரம் ஆணையாளர் வீரமுத்துக்குமார் தலைமையிலான அலுவலர்கள், நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிவாசல் தெரு, சின்னவன் பிள்ளை தெரு,செட்டி தெரு மற்றும் திருக்கோவிலின் நான்கு ரத வீதிகளில் ஆய்வு செய்தனர்.
அதில், 39 வீடுகளில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சட்ட விரோதமாக பயன்டுத்தப்பட்ட மின் மோட்டர்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர்கள், அந்த வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Discussion about this post