நான் அவனில்லை திரைப்பட பாணியில், திருமணம் செய்த பெண்ணை கைவிட்டு, கேரளாவில் பெண்தேடும் கல்லூரி பேராசிரியர் குறித்து, அவரை மணம் செய்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.
நான் அவனில்லை திரைப்படத்தில் நடிகர் ஜீவன் பல பெண்களை திருமணம் செய்து நீதிமன்றத்தில் நான் அவனில்லை என்று ஏமாற்றுவார். அதே பாணியில், கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ரகுபதி என்பவர் சென்னை ஆவடியை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை கடந்த 2000-ல் திருமணம் செய்துள்ளார். சாந்தியின் சொத்துக்களை தனது சொந்த செலவுக்காக விற்றதாகவும் கூறப்படுகிறது.
சாந்தியின் தந்தை வெங்கட்ராமன் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து விபத்தில் இறந்த நிலையில், தற்போது, 85 வயதான தன்னுடைய தாயின் ஓய்வூதியத்தில் காலம் கடத்துகிறார் சாந்தி. இந்நிலையில், தான் சாந்தியை சந்தித்ததே இல்லை என்றும், நான் அவனில்லை என்றும் நீதிமன்றத்தில் நிரூபிக்க முயற்சித்துள்ளார் ரகுபதி.
ஆனால் இதை ஏற்காத சென்னை உயர்நீதிமன்றம், சாந்திக்கு ரகுபதி கொடுக்க வேண்டிய தொகையை, திருப்பித் தர அவருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆயினும் இதை காற்றில் பறக்கவிட்ட ரகுபதி, கேரளாவில் மீண்டும் திருமணம் செய்ய, திருமண இணையதளம் மூலம் முயற்சித்து வருவதாக சாந்தி குற்றம் சாட்டியுள்ளார். தன்னிடமிருந்து ரகுபதி பறித்த தொகையை தனக்கு மீட்டுத் தரவும் அவர் கோரியுள்ளார்.
Discussion about this post