இந்தியாவெங்கும் மழைக்காலத்தில் இதுவரை பெய்த மழை வழக்கத்தைவிட 39% குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் மழைப் பற்றாக்குறை குறித்து விரிவாகப் பார்ப்போம் இந்த செய்தித் தொகுப்பில்…
நாடெங்கும் உள்ள வானிலை மைய துணை நிலையங்களில் இருந்து கிடைத்த மழைப் பொழிவு அளவுகளின் படி, 84% துணை நிலையங்கள் வழக்கத்திற்குக் குறைவான மழைப் பொழிவையே பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இம்மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய மழைக்காலம் செப்டம்பர் 30 அன்று நிறைவடைகிறது. இதில் ஜூன் மாதம் 22 ஆம் தேதிவரை பெய்த மழையின் அளவை, சராசரி மழை அளவோடு ஒப்பிட்டே இந்த ஆய்வு முடிவை மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
மேலும் மத்திய நீர்வள ஆனையத்தின் தரவுகளின்படி, நாடெங்கும் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் 80% நீர்த்தேக்கங்களில் வழக்கத்திற்குக் குறைவான நீர் இருப்பே உள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றில் 11 நீர்த்தேக்கங்கள் முற்றிலும் வறண்ட நிலையில் உள்ளன என்பதும் கவலைத்தரக் கூடியதாக உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையமானது கிழக்கு மற்றும் வடகிழக்குப் பிரிவு, தெற்கு தீபகற்பப் பிரிவு, மத்திய இந்தியா பிரிவு, வடமேற்கு இந்தியா பிரிவு என்ற 4 பெரும் பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் மத்திய இந்தியா பிரிவில் உள்ள 10 துணை நிலையங்களில் ஒடிஷாவில் உள்ள துணை நிலையத்தில் மட்டுமே இயல்பான மழை அளவு பதிவாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வித்ர்பா, மரத்வாடா, மத்திய மகாராஷ்டிர ஆகிய வானிலை துணை நிலையங்களில் மிகக் கடுமையான மழைப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது, இதனால் மகாராஷ்டிர மாநிலம் கடும் வறட்சியை எதிர்நோக்கும் நிலையில் உள்ளது.
வறட்சி என்பது தமிழகத்திற்கு மட்டுமே உள்ள பிரசனை என்பது போல எதிர்க்கட்சிகள் மக்களிடம் பொய்ப் பிரசாரம் செய்துவரும் நிலையில், இந்த ஆய்வு விவரங்கள் நாடு தழுவிய வறட்சியின் மத்தியிலும் தமிழகம் வறட்சியை வலிமையோடு தாக்குப்பிடித்து வருகின்றது என்பதை மக்களுக்குக் கூறக் கூடியதாக உள்ளது.
Discussion about this post