தீபாவளி பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு, துவங்கி சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.
இந்தாண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. சென்னை உட்பட வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு, முன்கூட்டியே கிளம்புவது வழக்கம். இந்தநிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதற்கான முன்பதிவை இன்று காலை 8 மணி முதல் செய்ய அறிவிப்பு வெளியானது. இதற்காக சென்னை எழும்பூர், மத்திய ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் முன்பதிவுக்காக காத்திருந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. காத்திருப்பு பட்டியலில் கூட இடம் கிடைக்காததால், பலர் ஏமாற்றமடைந்தனர். அதேபோல் அக்டோபர் 26 ஆம் தேதி சனிக்கிழமை ஊருக்குச் செல்பவர்கள், நாளை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், தீபாவளியன்று ஊருக்குச் செல்பவர்கள் வரும் 29 ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post