எம்பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்றம் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம், விரைவில் திமுகவின் தயாநிதிமாறன் மீதான பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கை விசாரிக்க உள்ளது.
கடந்த 2004 முதல் 2007ம் ஆண்டு வரை, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்கட்சிக்கு, சென்னை பி.எஸ்.என்.எல்-லின் அதி விரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சத்து 71 ஆயிரத்து 391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, சிபிஐ கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தயாநிதிமாறன் தேர்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் மீதான வழக்குகள் அனைத்தும் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு விரைவில் மாற்றப்பட உள்ளது. தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவரது பதவி பறிபோவதோடு, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும்.
Discussion about this post