விடுதலை போராட்ட வீரரும், மொழி போர் தியாகியுமான தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம்…
இந்திய விடுதலைக்காக அளவில்லாத பங்களிப்பை அளித்த பலரில் ஒருவராக அறியப்படுபவர் தமிழறிஞர் மயிலை பொன்னுசாமி சிவஞானம் எனும் ம.பொ.சிவஞானம். ஜூன் 26 1906ல் சென்னையில் பிறந்த ம.பொ.சி., பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைகாக போராடி சிறை சென்ற அவருக்கு, சிறையில் துவங்கியது தமிழ் ஆர்வம். இதன்காரணமாக 1945ல் தமிழ் முரசு என்ற மாத இதழை தொடங்கினார். அதன் மூலம் தனது கருத்தை பரப்புரை செய்து வந்தவர், அடுத்த ஆண்டே இளைஞர்களை கொண்டு தமிழரசு கழகம் என்ற இயக்கத்தை துவக்கினார். சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு, வீரகண்ணகி உள்ளிட்ட 13 நூல்களை எழுதி சிலப்பதிகாரத்தின் புகழை பரப்பிய பெருமை ம.பொ.சியையே சேரும். கப்பலோட்டிய தமிழன் என்ற நூலை எழுதி வ.உ.சிக்கு பெருமை சேர்த்தவர் மா.பொ.சிவஞானம். வீரபாண்டிய கட்டபொம்மன் நூலும் வரலாற்று புகழ் வாய்ந்தது.
இந்திய நாடு மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, மதராஸ் மாகாணத்தை ஆந்திரர்கள் கேட்டபோது, அதனை எதிர்த்து போராடி தற்போதையை சென்னையை தமிழகத்தின் தலைநகராக்க பெரும் பாடுபட்டார். தமிழறிஞர் ரா.பி.சேதுபிள்ளை, ம.பொ.சி.க்கு சிலம்பு செல்வர் என பட்டத்தை சூட்டி அவரை பெருமைப்படுத்தினார். தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றிய ம.பொ.சி.க்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ம.பொ.சி எழுதிய நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி தமிழக அரசு சிறப்பு செய்துள்ளளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post