உலக கோப்பையின் பரபரப்பான லீக் ஆட்டத்தில், மேற்கு இந்திய தீவுகள் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் டாசில் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்டின் குப்தில் மற்றும் கோலின் முன்ரோ ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். எனினும் அடுத்து வந்த வில்லியம்சனும், டெய்லரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வில்லியம்சன் அதிகபட்சமாக 148 ரன்கள் எடுத்தார்.
வெற்றி பெற 292 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ரன்களைச் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் கிறிஸ் கெய்ல், ஹெட்மியர் இணை எதிர் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ஹெட்மியர் 54 ரன்களுக்கும், கெயில் 87ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய பிராத்வெயிட் அதிரடி காட்ட, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 82 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 சிக்சர்களுடன் சதமடித்தார். ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்த மேற்கு இந்திய தீவுகள், வெற்றி பெற 7 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில் பிராத்வெயிட் பந்தை தூக்கி அடிக்க முயலவே, பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனது. இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
Discussion about this post