அப்பா தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர். அவரின் மகனோ சினிமாவுக்குள் நுழைய ஆசைப்படுகிறார். மகனின் விருப்பத்தின் பேரில் அவரை வைத்து படமெடுக்கிறார். படம் பார்த்தவர்கள் இதெல்லாம் நடிப்பதற்கான முகமா? என்றே சொன்னார்கள். அப்போதுதான் அவருக்கு புரிந்தது சினிமாவிலுள்ள சிரமங்கள். போட்டிகளில் ஜெயிப்பது, தோற்பது முக்கியமல்ல..கலந்து கொள்வதே முக்கியம். அடுத்தடுத்த படங்களில் அசராமல் நடித்து இன்று தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக ஜொலிக்கிறார் நடிகர் விஜய்…இல்லை..இல்லை… தளபதி விஜய்.
90களின் ஆரம்ப காலக்கட்டம் அது.. அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் ரஜினியும்,கமலும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட நேரம் அது. அந்த இடைவெளிதான் தமிழ்சினிமாவின் அடுத்த தலைமுறை ஸ்டார் நடிகர்கள் உருவாக இடமளித்தது.நடிக்க வந்து 4 வருடங்கள் கழித்து தனக்கான ரசிகர்களை ‘பூவே உனக்காக’ மூலம் கண்டுபிடிக்கிறார். அவர் முதன்முதலில் கவர்ந்தது தனிமனிதர்களை அல்ல. குடும்ப உறுப்பினர்களை. ஆச்சர்யம் என்னவென்றால் அந்த குடும்பத்தினர்களை இன்றளவும் தனக்கான ரசிகர்களாக கொண்டுள்ளது தான். அதற்கு மேலும் வலு சேர்த்தது அவரின் ‘காதலுக்கு மரியாதை’. அதன் பிறகு அவர் நடித்த ‘லவ் டுடே’, `ஒன்ஸ்மோர்’, , `துள்ளாத மனமும் துள்ளும்’,‘பிரியமானவளே’ போன்ற படங்கள் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பெற்று தந்தது என்றே சொல்லலாம்.
இன்று அவருக்கு இருக்கும் இளைய தலைமுறை ரசிகர்களை பெற்று தந்த படம் “குஷி”. இன்று நாம் திரையில் பார்த்த இளமையான விஜய்யை அன்றே காட்டியது இந்த படத்தில் தான். விஜய்யின் 25வது படமாக வெளிவந்த ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படித்தியிருப்பார்.
நடிக்க ஆரம்பித்த போது நடிகர் அஜித்துடன் ‘ராஜாவின் பார்வையிலே’, சில ஆண்டுகள் கழித்து சூர்யாவுடன் ‘நேருக்கு நேர்’, ‘ப்ரண்ட்ஸ்’ படங்களில் நடித்தார் விஜய். பல ஆண்டுகள் கழித்து ஜீவா,ஸ்ரீகாந்துடன் “நண்பன்” என மல்டி ஹீரோ கதைகளிலும் நடித்தார்.
தொடர்ந்து பத்ரி, ஷாஜகான்,வசீகரா, யூத் போன்ற காதல் படங்களில் நடித்த விஜய் 2004ல் தன் ஏரியாவை ஆக்ஷன் களத்திற்கு மாற்றினார்.“திருமலை”யில் ஆரம்பித்த இந்த புதுப்பயணம் “கில்லி”யில் புது சாதனை படைத்தது. 50 கோடி ரூபாய் வசூலில் சாதனைப் படைத்தது கில்லி. தங்கச்சி பாசம்,அம்மா செண்டிமெண்ட் என திருப்பாச்சி, சிவகாசி படங்கள் மீண்டும் பெண் ரசிகர்களின் மத்தியில் விஜய்க்கு ஏகோபித்த ஆதரவினை பெற்று தந்தது. ‘சச்சின்’ படத்தில் மீண்டும் துறுதுறு ரொமாண்டிக் விஜய்யை பார்க்க முடிந்தது. அவரின் “போக்கிரி” படம் இளைய தலைமுறையை பெரிதாக கவர்ந்தார் விஜய்.
அதன்பிறகு 3 வருடங்கள் தொடர் தோல்விகள். அதில் அவரது 50வது மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மீண்டும் எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமாக 2011 தீபாவளிக்கு “வேலாயுதம்”, 2012 பொங்கலுக்கு “நண்பன்”, தீபாவளிக்கு “துப்பாக்கி” என மொத்த பண்டிகை நாட்களிலும் மெர்சல் காட்டினார். அதிலும் துப்பாக்கி படம் தான் தமிழ் சினிமாவின் கடைசியாக வெளிவந்த பிளாக்பஸ்டர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே விஜய் நடிப்பில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப்படைத்த முதல் படம்.
அதன்பிறகு விஜய் நடித்தோ, மற்ற நடிகர்கள் நடித்தோ வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்ததே தவிர பிளாக்பஸ்டர் வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு தலைவா, ஜில்லா என தொடர்ந்த விஜய்க்கு “கத்தி” மெஹா ஹிட் படமாக அமைந்தது. கிட்டதட்ட அவரது படங்கள் எல்லாம் சர்ச்சைகள் இல்லாமல் வெளிவருவதில்லை. ஆனால் அதுவே படத்திற்கான வெற்றியாக மாறியது.
முதல்முறையாக “புலி” படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்தார். படம் தோல்வி. ஆனால் குழந்தைகளை பெரிதும் கவர்ந்தார். அதன்பிறகு அட்லியுடன் “தெறி”, “மெர்சல்” என தமிழ் சினிமாவையே தெறிக்க விட்டார். இதில் மெர்சலுக்கு எழுந்த சர்ச்சை படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்தது. மேலும் அதுவரை “இளைய தளபதி” யாக கொண்டாடப்பட்ட நடிகர் விஜய், மெர்சல் மூலம் “தளபதி”யாக மாறினார்.
துப்பாக்கி, கத்திக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் “சர்கார்”ல் இணைந்தார். வழக்கமான கதை திருட்டில் தொடங்கி ஏராளமான சர்ச்சைகள்..ஆனாலும் படம் ஹிட்…
இவரது நடிப்புக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் 1998-ம் ஆண்டு `கலைமாமணி’ விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் `சிறந்த நடிகருக்கான’ விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டு `எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்’ இவருக்கு `கெளரவ டாக்டர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது. தனது அசாதாரண நடிப்பாலும் மாஸான பன்ச் வசனங்களாலும் ரசிகர்களை ஈர்த்தார். அவரது நடனம் மற்றும் பாடல்களுக்கு தனியே ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் அவரைப்போல் நடனம் ஆட யாரும் இல்லை என்று பிற நடிகர்கள் சொல்லுமளவிற்கு கெத்து காட்டுவார்.
நடிப்பு, நடனம் கடந்து பாடகராகவும் மக்கள் மனம் கவர்ந்தார் விஜய். இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவரை தமிழ் சினிமா மட்டுமல்ல, தமிழக குடும்பங்களின் செல்லப்பிள்ளை என்றே சொல்லாம். இன்றைக்கு மற்ற நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களும் விஜய்யை ரசிக்க காரணம் அவரது ஸ்டைலும், அந்த எனர்ஜியான ஸ்கிரீன்
பிரசன்ஸ் தான்.
தமிழ் சினிமாவில் விஜய்-ஷாலினி, விஜய்-ஜோதிகா, விஜய்- சிம்ரன், விஜய்-த்ரிஷா என ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற க்யூட் ஜோடிகளாக பார்க்கப்பட்டார்கள்.
தமிழ் மொழியில் ‘மகிழ்வித்து மகிழ்’ என்ற சொல்லாடல் உண்டு. அதனை சினிமாவில் நிரூபித்துக் காட்டியவர் விஜய். வயது, வித்தியாசமில்லாத தனது ரசிகர்களை கவரும் வகையிலேயே தொடர்ந்து அதற்கான படங்களில் நடித்து வருகிறார்.
மீண்டும் 63வது படமாக அட்லியுடன் இணைந்து இந்த பிறந்தநாளில் “பிகில்” கிளப்ப தயாராகியிருக்கிறார் விஜய்…!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி….!
Discussion about this post