தாளக்கருவிகள் தரும் துள்ளல் இசையால்தான் இசை இன்பமயமாகிறது என்பார்கள்.. உலக இசை தினமான இன்று, இசைக்காக வாழும் ஒரு சிறுவனைப்பற்றிய செய்தித்தொகுப்பை இப்போது பார்க்கலாம்…
இசை இதமானது என்பது உண்மைதான் என்றாலும் தீர்க்கமான இசை துள்ளலில்தான் முழுமைபெறும்… அது கர்நாடக சங்கீதமோ , மேற்கத்திய இசையோ எதுவானாலும், துள்ளல் இசையை உருவாக்கும் தாளக்கருவிகளின் பங்கு எந்த இசைக்கச்சேரியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது…
ஆனால், கர்நாடக இசையில் மிருதங்கம், மேற்கத்திய இசையில் ட்ரம்ஸ், மக்களிசைக்கான பறை என எந்த இசையின் தாளக்கருவிகளோடும், தன் விரல்களால் விளையாடும் 13 வயது சிறுவன் தான் இந்த ராம்ஜி..
ட்ரம்ஸ் ராம்ஜி என பெயர் பெற்றிருக்கும் தீபக் ராம்ஜி, 9 ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். இசைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் ஒரு இசைவிரும்பி இவர்… குழந்தை பருவம்முதலே இசையாலும் இசைக்காகவும் வாழும் ராம்ஜிக்கு, தந்தை ராமமூர்த்தி எல்லா வகையிலும் துணையாக நிற்கிறார்..
2ம் வகுப்பு படிக்கும்போது , ட்ரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தில் தொடங்கிய இவரது இசைப் பயணம், இப்போது 3 முறை ட்ரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து வாசித்ததுடன் தொடர்கிறது என்றும் முதல் முறை வாசித்தபோது ட்ரம்ஸ் சிவமணி மூலமே கிடைத்த பரிசையும் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் ராம்ஜி…
அந்த தாளக்கருவிகளில் பல்வேறு பட்டயப்படிப்புகளை மேற்கொண்டு வரும் ராம்ஜி, லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியில் 10 வயதில் 8 வது கிரேடு முடித்தவர் ..மேலும், இதுவரை தமிழகத்தில் யாருமே முடிக்காத, ஏ.ட்டி.சி.எல் பட்டயப்படிப்பையும் படித்துக்கொண்டிருக்கிறார்.
டிஜே உள்ளிட்ட இசை முறைகளாலும், இசையமைப்பு மென்பொருட்களாலும் தடம் மாறிப்போயிருக்கும் இசையுலகில் , தன் மகன் சாதிக்கும் நாளுக்காக காத்திருக்கிறார் இந்த தந்தை… ட்ரம்ஸ் கருவியை பொறுத்தவரை, இதற்கு முந்தைய உலக சாதனை ஒரு நிமிடத்தில் 2 ஆயிரத்து 109 முறைகள் இசைக்கப்பட்டதுதான். இதை முறியடிப்பதும், இசையமைப்பாளராவதுமே தன் எதிர்காலக்கனவு என்கிறார் ராம்ஜி…
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தன் மகனுக்காக சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பில் இசைக்கருவிகளும், அவற்றை கொண்டு செல்வதற்காகவே பிரத்யேகமாக கார் ஒன்றும் வாங்கியுள்ள இந்த தந்தையின் ஆசையெல்லாம், இசையுலகில் தன் மகன் வெல்ல வேண்டும் என்பதுதான்…
Discussion about this post