வருடத்திற்கு ஒரு லட்சம் பேரில் 105ல் இருந்து 150 பேர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பக்கவாதம் என்றால் என்ன? அது எதனால் வருகிறது? அதற்கான மருத்துவம் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்…
திடீரென மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால், அந்த இடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு கை, கால்கள், வாய் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இடது பக்க மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வலது பக்கம் உள்ள கை கால்களும், வலது பக்க மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டால் இடது பக்க கை கால்கள் தங்களது செயல்திறனை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பேச்சு வராமல் அவதிப்படும் நிலையும் உருவாகிறது.
சக்கரை நோய், ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மது, புகையிலை அதிகம் பயன்படுத்துவோருக்கும் பக்கவாதம் அதிக அளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளை பக்கவாதத்திற்கு அறிகுறிகளாக மயக்கம், கை கால்களில் செயல் திறன் நிறுத்தம் ஆகியவை ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்ட நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டிஷு பிளாஸ்மினோஜன் ஆக்டிவேட்டார் என்று சொல்ல கூடிய ஊசி உடலில் செலுத்தப்பட்டால் ஒரு சிலருக்கு உடனடியாகவோ, அல்லது 3 மாதங்களுக்குள்ளாகவோ சரியாகும்.
9 மணி நேரத்திற்குள் வருபவர்களுக்கு சி.டி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்டவைகள் மூலம் பக்கவாதம் உறுதி செய்யப்பட்டு ஆஞ்சியோ கிராம் என்ற சிகிச்சையின் மூலமாக 6 மாதத்திற்குள் சரி செய்துவிடலாம் என்றும், பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் வழக்கம் போல தங்களது வேலைகளை தொடரலாம் என்றும் மருத்துவர்கள்தெரிவிக்கின்றனர்.
Discussion about this post