உளவு பிரிவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷாவும் அத்துறையின் இணை அமைச்சர்களாக நித்தியானந்த் ராய் மற்றும் கிஷான் ரெட்டி ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். மத்திய உள்துறையின் கீழ் உளவு பிரிவு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகள் செயல்படுகின்றன.
இந்தநிலையில் உளவு பிரிவை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்துள்ளார். அதன்படி உளவு தகவல்கள் அனைத்தும் நேரடியாக அமித் ஷாவுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். அதேசமயம் நிர்வாகம் ரீதியிலான பிற பிரிவுகளை இணை அமைச்சர்களுக்கு அமித் ஷா ஒதுக்கியிருக்கிறார்.
இடதுசாரி தீவிரவாத தடுப்பு பிரிவு, மத்திய-மாநில உறவு, எல்லை நிர்வாகம், மத்திய ஆயுதப்படை மற்றும் வெளிநாட்டினர் பிரிவை நித்தியானந்த் ராய் கவனிக்க உள்ளார். கிஷான் ரெட்டிக்கு ஜம்மு காஷ்மீர் பிரிவு மற்றும் வடகிழக்கு பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளும் ஒரே இணை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post