17வது மக்களவையின் சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த ஓம் பிர்லா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து நிரந்தர சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பாஜக சார்பில் ராஜஸ்தான் எம்.பி, ஓம் பிர்லா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிய, அமித் ஷா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழி மொழிந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போட்டி வேட்பாளரை நிறுத்தாத நிலையில், ஓம் பிர்லா ஒரு மனதாக சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஓம் பிர்லாவை பிரதமர் மோடி மற்றும் திரளான உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகருக்குப் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய ஓம் பிர்லா, தன்னை சபாநாயகராக தேர்ந்தெடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.
Discussion about this post