மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10ம் தேதி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள், அங்கு பணியாற்றி வந்த 2 பயிற்சி மருத்துவர்களை தாக்கினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கடந்த 11ம் தேதி முதல் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடந்த 14ம் தேதி முதல் 3 நாட்கள் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன்படி இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே சீரான சட்டத்தை மத்திய அரசு இயற்றவும் கோரிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post