புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பிரமோற்சவத்தையொட்டி நடைபெற்ற தெப்போற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இக்கோயிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி அபய ஹஸ்த முத்திரையுடன் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்து வருகிறார். சனி தோஷம் நீங்க வேண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோயிலின் வைகாசி விசாக ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே காணக் கிடைக்க கூடிய அரிய நிகழ்ச்சியான தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா 13ம் ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது.
தெப்பத்தில் அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை வைகாசி விசாக பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
Discussion about this post