ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றடைந்தார். மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில், நாளை மற்றும் நாளை மறுநாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ள நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் பிஷ்கெக் நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.
இந்த மாநாட்டின் இடையில் சீன அதிபர் ஷி ஷின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் கிர்கிஸ்தான் அதிபர்களுடன் தனித்தனியாக மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் சீன அதிபரை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக சீன அதிபரின் பிறந்ததினத்தையொட்டி அவருடன் கைகுலுக்கி மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில், மோடி மற்றும் இம்ரான் கான் இடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார்.
சீனா தலைமையிலான இந்த அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் இணைந்துள்ள நிலையில், இந்த வருடாந்திர கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை வலுப்படுத்துவது குறித்து இந்தியா விவாதிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Discussion about this post