போலந்து நாட்டில் விண்வெளிப் பயிற்சிக்கு தேனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தேர்வாகி அசத்தி உள்ளார். விண்வெளி ஆய்வில் சாதிக்க துடிக்கும் தமிழக மாணவி குறித்து பார்க்கலாம்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்தவர் தாமோதரன். ஓவியரான இவரது மகள் உதய கீர்த்திகா, அல்லிநகரம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதான ஈர்ப்பால், விண்வெளி துறை மீது ஆர்வம் வந்ததாக கூறும் கீர்த்திகா, ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து விண்வெளி பயிற்சியை பெறவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரோவின் பல வெற்றிகரமான திட்டங்களை பட்டியலிட்ட கீர்த்திகா, சந்திராயன் மற்றும் ஆதித்யான் திட்டங்கள் குறித்து தனது பிரமிப்பான பார்வையை பதிவு செய்தார்.
இதற்கிடையில் தனது மகளின் கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு படிப்புக்கு பலரின் உதவிகள், தங்களின் பெரும் சுமையை குறைத்தாக கூறுகிறார் உதய கீர்த்திகாவின் தந்தை தாமேதாரன். விண்வெளி ஆய்வுக்கு தேவையான அனைத்து அடிப்படை பயிற்சிகளையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளி காலங்களில் இஸ்ரோ விருதுகளை பெற்றது தன்னை மேல் ஊக்கப்படுத்தியதாக கூறுகிறார் உதய கீர்த்திகா. நாசாவுக்கு இணையாக விண்வெளி திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்துவதை மங்கள்யான் திட்டத்தின் மூலம் உலகம் அறிந்ததாக அவர் தெரிவித்தார். வருங்காலங்களில் பல விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இஸ்ரோ மேலும் வலிமை பெறும் என்றார். இஸ்ரோ மூலம் முதல் பெண்ணாக தனது விண்வெளி ஆய்வுப் பயணத்தை மேற்கொள்வேன் என்றும் கீர்த்திகா நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post