திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளத்தை சுத்தம் செய்யவும் அங்கு மீன்கள் உயிர்வாழ தேவையான ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்து துவக்கி வைத்தார்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் பிரம்ம தீர்த்தக்குளம் மற்றும் சிவகங்கை தீர்த்தக்குளம் ஆகியவற்றில் கடந்த மாதத்தில் திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஆய்வு நடத்திய மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைப்பாட்டால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் குளத்து நீரில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வகையில் மிதவை அமைப்பு கொண்ட தொட்டிகளில் வெட்டிவேர் மற்றும் கல்மஞ்சள் செடிகள் நடப்பட்டு குளத்தில் விடப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு நல்ல பலனை அளித்த நிலையில், தற்போது அண்ணாமலையார் கோயிலிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
குளத்தின் அழுக்குகளை சுத்தம் செய்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் ஆக்சன் டோஸ் கலவையும் குளத்து நீரில் தெளிக்கப்பட்டது. இதனிடையே, குளத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இந்தப் பணிகளை துவக்கி வைத்தார்.
Discussion about this post