பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் 72-வது பிறந்த நாள் இன்று. 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி எஸ்.பி.சம்பமூர்த்தி-சகுந்தலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். 5 சகோதரிகள் மற்றும் 2 சகோதரர்கள் எனப் பெரிய குடும்பத்தில் பிறந்த எஸ்.பி.பியின் அப்பா ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த எஸ்.பி.பி, தனது தந்தையின் ஆசைப்படி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.
1964 ஆம் ஆண்டு அமேட்டூர் கல்லூரயில் தெலுங்கு இசை நிறுவனம் பாட்டுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது, அதில் கலந்து கொண்ட எஸ்.பி.பிக்கு முதல் பரிசு கிடைத்தது. இதுதான் அவரின் பாடல் ஆர்வத்தை மேலும் தூண்டி பின்னணிப் பாடகராக வேண்டும் என்ற ஆர்வத்தை விதைத்தது.
1966 ஆம் ஆண்டு முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். தொடர்ந்து கன்னடப் படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழில் முதன்முதலில் பாடியது 1969 ஆம் ஆண்டு காதல் மன்னன் ஜெமினி கணேசனின் “சாந்தி நிலையம்” படத்திற்கு “இளையகன்னி” என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆயிரம் நிலவே வா” என்ற பாடல் முதலில் இவர் குரலில் வெளிவந்து விட்டது.
தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். குறிப்பாக, ரஜினி, கமல் நடித்த திரைப்படங்களில் இவரது பாடல்கள் இல்லாமல் இருக்காது. இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ்.பி.பி., எஸ்.ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம் 1990-களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால், மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும்.
எஸ்.பி.பி. 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.
எஸ்.பி.பி யின் சாதனைகள்:
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.
எஸ்.பி.பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
பிலிம்பேர் விருதினை ஒரு முறையும், பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார்.
இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.
இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை
இந்திய திரையிசையில் செய்திருக்கிறார்.
இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார்.
தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6 மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையுடன் அரை நூற்றாண்டைக் கடந்தும் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடும் எஸ்.பி.பி. இன்றும் அதே இளமைத் துள்ளலுடன் தொடர்கிறது. நியூஸ் ஜெ தொலைக்காட்சி சார்பாக எஸ்.பி. பாலசுப்பிரமணியனனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Discussion about this post