நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் அக்கட்சி எம்.பி.க்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற மைய அறையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த பதவிக்காக சோனியா காந்தியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்தார். மக்களவை, மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சோனியா காந்தி தலைவராக இருப்பார் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய பொறுப்புகளை மகன் ராகுலிடம் ஒப்படைத்து அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சோனியா காந்தி, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாகவே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Discussion about this post