ஜூன் 8, 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு, ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பிரதான பாடத்திற்கு குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கா விட்டால், பிரதான பாடத்தில் ஒரு மதிப்பெண் கூட எடுக்காதவர்கள் அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களாகிவிடுவர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, 1500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதாமல் உள்ளனர் என்றும், லட்சக் கணக்கானவர்கள் தேர்வு எழுத காத்திருப்பதால், தேர்வுக்கு தடை விதிக்க கூடாது எனவும் வாதிட்டது. கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Discussion about this post