கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், ஒரே ஆண்டில் மேட்டூர் அணை 3வது முறையாக முழு கொள்ளவை எட்டியது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையளவு குறைந்ததையொட்டி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு 85 ஆயிரம் கனஅடியில் இருந்து, 75 ஆயிரம் கனஅடியாக நீர் வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்துள்ளதை தொடர்ந்து, நீர் திறப்பும் குறைந்து வருகிறது. தற்போது, மேட்டூர் அணை நீர்மட்டம் 120 புள்ளி 21 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 80 டி.எம்.சி.யாகவும் உள்ளது. ஓகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 45வது நாளாகவும், பரிசல்களை இயக்க 13வது நாளாகவும் தடை நீடிக்கிறது.
Discussion about this post