முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் நீர்பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் கடந்த இரு மாதங்களாக அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 111 புள்ளி 9 அடியாகவும், நீர் இருப்பு ஆயிரத்து 247 மில்லியன் கனஅடியாகவும் உள்ளன. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடிக்கு கீழ் உள்ளதாலும், போதிய நீர் வரத்து இல்லாத காரணத்தாலும் விவசாயத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் நீர் திறப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் துவங்கினால் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விரைவாக நீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
Discussion about this post