உதகையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற மலர் கண்காட்சியை ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவின் 123 மலர்க் கண்காட்சி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து மலர் கண்காட்சியை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண வண்ண மலர்களால் பல்வேறு விதமான வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மலர்களால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றம், அருவி போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. 5 நாட்கள் நடைபெற்ற மலர்கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை கண்டு களித்துள்ளனர்.
மலர் கண்காட்சியை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறைவு நாள் நிகழ்ச்சியில் பரிசுக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பார்வையாளர்களை கவரும் விதமாக சிறப்பாக பூந்தோட்டம் வடிவமைத்திருந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி அணிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. சிறந்த மலருக்காக வழங்கப்படும் முதலமைச்சர் கோப்பை பேன்சி பிளாக் என்ற மலருக்கும், சிறந்த பூந்தோட்டத்திற்கான முதலமைச்சர் கோப்பை கிஷோர் என்பவருக்கும் வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற 680 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசெண்ட் திவ்யா, வேளாண் துறைச் செயலர் சுகன் தீப் சிங் பேடி மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post