மும்பை பங்குசந்தைகள் இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்செக்ஸ் 39 ஆயிரத்து 554.28 புள்ளிகளை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் பங்கு சந்தைகளில் இரண்டாவது நாளாக இன்றும் ஏற்றம் காணப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வாரத்தின் துவக்க நாளான நேற்று, பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,422புள்ளிகள் உயர்ந்து 39,352.67 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 421.10 புள்ளிகள் உயர்ந்து 11,828.25 புள்ளிகளில் நிறைவடைந்தது.
ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், லார்சென், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. நிதி, வாகனம், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. 40 நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உயர்வை சந்தித்தன.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளன. முன்னதாக 39 ஆயிரத்து 487 புள்ளிகளை அடைந்ததே சாதனையாக கருதப்பட்ட நிலையில் தற்போது அந்த புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் 39 ஆயிரத்து 554.28 என வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
தேசிய பங்குசந்தையான நிஃப்டி 11 ஆயிரத்து 858 புள்ளிகளாக இருந்தது.
Discussion about this post