சென்னை நெற்குன்றம் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 8 பேர் மீது அமிலம் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் சென்னை நெற்குன்றம் முனியப்பா நகர் மூன்றாவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதுடன் கோயம்பேட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விடுமுறை என்பதால் வீட்டின் மாடியில், மது அருந்திக் கொண்டிருந்த போது மது போதையில் 8 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, அதே தளத்தில் வெள்ளிப் பட்டறையில் பணிபுரியும் கன்னியப்பன் என்பவர் தகராறில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை தாக்க முயன்றது. இதையடுத்து, வெள்ளிப் பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் அமிலத்தை எடுத்து 8 பேர் மீதும் அவர் ஊற்றியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர்கள், கேஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கன்னியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post