கோவையில் இளைஞர்களை வெட்டிய மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.
கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகியோர் கொலை வழக்கு ஒன்றில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தனர். வழக்கம்போல் இன்று கையெழுத்திட்டுவிட்டு அவினாசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல், பிரதீப், தமிழ்வாணன் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ், ஹரி, தனபால், சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே தப்பியோடிய கும்பலை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post