“ஹாய் மச்சான்ஸ்” என்று செல்லமாக தமிழ் சினிமா நடிகைகளில் யார் அழைப்பார்கள் என்று கேட்டால் தூங்கிக் கொண்டிருக்கும் 90’ஸ் கிட்ஸ் கூட சொல்வார்கள் நடிகை நமீதாவின் பெயரை. அந்த அளவுக்கு அந்த வார்த்தை பிரபலம்.
1981ம் ஆண்டு மே 10ல் குஜராத்தில் பிறந்த நமீதா முதலில் அறிமுகமானது 2002ம் ஆண்டு “சொந்தம்” என்ற தெலுங்கு படத்தில் தான்.
தமிழில் 2004ல் மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த “எங்கள் அண்ணா” திரைப்படத்தில் அறிமுகமானார் நமீதா.
அதன்பிறகு ஏய், சாணக்யா, இங்கிலீஸ்காரன், கோவை பிரதர்ஸ்,தீ என வரிசையாக பிரபல ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும் 2007ல் முன்னணி ஹீரோக்களான விஜய்யுடன் அழகிய தமிழ்மகனிலும், அஜித்துடன் பில்லாவிலும் நடித்தார். இதில் பில்லாவில் அவர் ஏற்று நடித்த சி.ஜே கதாபாத்திரம் ரசிகர்களிடம் வெகுவாக பேசப்பட்டது.
என்னதான் நமீதா படங்களில் கவர்ச்சியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தாலும், அவர் மேடைகளில் “ஹாய் மச்சான்ஸ்” என்ற செல்லமாக சிணுங்கும் அந்த வார்த்தைக்கு தமிழ்நாடே கிறங்கியது எனலாம்.
சிறிதுகாலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று மீண்டும் மீடியாவுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அது அவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு 2017ல் தனது நீண்ட கால நண்பரான வீரேந்திர சௌத்திரியை திருமணம் செய்துக்கொண்டார்.
தற்போது மீண்டும் படங்களில் அவர் நடிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. நிச்சயம் தமிழ்நாடு நமீதாவை மறந்தாலும் அவரின் “மச்சான்ஸ்” வார்த்தையை மறக்காது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நமீதா…!
Discussion about this post