ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கிணறுகளுக்கு பூட்டுப் போட்டு பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிக்கல் ஊராட்சியில் உள்ள பாண்டியன் ஊரணி கடந்த பல ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி நீரின்றி காணப்படுகிறது. நிலத்தடி நீரும் வற்றிய நிலையில் இங்குள்ள மக்கள் குடிநீருக்காக தினமும் அல்லாடுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே நீர் ஆதாரம் பாண்டியன் ஊரணியில் இருக்கும் குடிநீர் தொட்டிதான். அரசின் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொட்டிக்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வழங்கபட்டு வருகிறது.
சிக்கல் ஊராட்சியில் உள்ள பாண்டியன் ஊரணிக்குள் 50க்கும் மேற்பட்ட சிறு கிணறுகளை பொதுமக்கள் ஆங்காங்கே தோண்டியுள்ளனர். தற்போது இந்த கிணறுகள் தான் பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் அட்சய பாத்திரமாக இருக்கிறது. எனவே இந்த சிறு கிணறுகளை பாதுகாக்கும் முயற்சியாக அனைத்து கிணறுகளுக்கும் வேலி அமைத்து பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தியுள்ளனர்.மேலும் கிணறுகளுக்கு பூட்டு போட்டுள்ளனர்
இந்த கிணறுகளை கால்நடை மற்றும் மனித பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து, குளிக்க மற்றும் குடிக்க என அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஆழ்துளை கிணறுகளைத் தோண்டி குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைத்து கொடுத்தால் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோடை வெப்பம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக சிக்கலில் குடிநீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்காலிக கிணறுகளில் போதிய நீர் ஊறாததால், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post