சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க குளு குளு வசதியுடன் திருச்சியை கலக்கி வரும் ஆட்டோவுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கோடை வெயில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக சுட்டெரிக்கிறது. கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து காலை 10 மணிக்கு மேல் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. ஏசி கார்களில் எல்லோராலும் பயணிக்க வசதி இருக்காது. ஆட்டோக்களில் சென்றாலும் அனல்காற்று மக்களை வறுத்து எடுக்கிறது. இந்தநிலையில், பயணிகளின் நலன் கருதி திருச்சி கே.கே நகர் அருகில், கே.சாத்தனூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சைமன் ராஜ், தனது ஆட்டோவில் உள் பகுதியை தென்னங் கீற்றுகளால் இரண்டு அடுக்குக்கு வேய்ந்துள்ளார்.
தென்னங்கீற்று வேய்ந்துள்ளதால் தார்ப்பாய் வழியாக வெப்பம் பயணிகளை தாக்குவதில்லை. சைமனின் தென்னங்கீற்று ஆட்டோவிற்கு, கே.சாத்தனூர் பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆட்டோவுக்குள் போய் அமர்ந்தால் ஜில்லென்ற உணர்வு ஏற்படுவதாக பயணிகள் கூறுகிறார்கள்.
காய்ந்த தென்னங்கீற்று ஓலைகளைக் கொண்டு கூரை வேய்ந்துள்ளதால், பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று ஆட்டோ ஓட்டுநர் சைமன் கூறுகிறார்.
சைமனின் இந்த புதிய முயற்சியை, மற்ற ஆட்டோ ஓட்டுநர்களும் கையாள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Discussion about this post