ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய 12வது ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் மும்பை, சென்னை, டெல்லி, மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. முதல் தகுதி சுற்றுப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் வெளியேற்றுதல் போட்டியில் புள்ளி பட்டியலில் 3வது இடம் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், 4 ஆம் இடம் பிடித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில், தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில், வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் சென்னையுடன் மோதும். கடைசி இரண்டு போட்டிகளில் தோல்விய சந்தித்துள்ள ஹைதராபாத் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி இறுதி போட்டிக்கு முன்னேற தீவிரம் காட்டி வருகிறது. நூலிழையில் இரண்டாம் இடத்தை தவற விட்ட டெல்லி அணி இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் வரலாற்றில், 12 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணி ஹைதராபாத் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post