தமிழகம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபானி கரை கடந்ததை அடுத்து காற்றில் உள்ள ஈரப்பதத்தை புயல் ஈர்த்து சென்றது. இதனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் எனவும், ஈரப்பதம் அற்ற வரண்ட காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில், நேற்று முதல் கத்திரி வெயிலும் தொடங்கியுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. காரைக்காலில் கடந்த மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கத்திரி வெயில் தொடங்கி உள்ள நிலையில், காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் நண்பகல் நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post