அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபானி புயல், முற்றிலும் வலுவிழந்த நிலையில் வங்க தேசத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கோபல்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே ஃபானி புயல் கரையை கடந்தது. அதிதீவிர புயலாக மாறி கரையைக் கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
கலிங்கப்பட்டினம், பீமுனிப்பட்டினம் துறைமுகங்களில் 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு மற்றும் கங்காவரம், விசாகப்பட்டினத்தில் 8ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் சுமார் 11 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 879 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா மாநிலத்திற்கு 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளநிலையில் மேலும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஃபானி புயல் அதி தீவிர புயலில் இருந்து தீவிர புயலாக வலுவிழந்தது. முற்றிலும் வலுவிழந்த நிலையில் ஃபானி புயல் வங்கதேசத்தை எட்டியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post