மக்கள் தொகையில் 2வது பெரிய நாடு… 130 கோடி மக்களின் இருப்பிடம்… இவ்வளவு பெரிய ஜனநாயக தேசத்திற்கு நட்பு நாடு என்ற காரணத்திற்காக கட்டளையிடுகிறது அமெரிக்கா. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அமெரிக்கா கொடுத்த கெடு இன்றுடன் முற்று பெறுகிறது… இதனால் இந்தியர்கள் சந்திக்க கூடிய நெருக்கடிகள் குறித்து அலசுகிறது இந்த சிறப்பு தொகுப்பு….
உலக வர்த்தக வலைபின்னலில் தவிர்க்க முடியாத சக்தியாக அமெரிக்கா திகழ்வதற்கு அமெரிக்க டாலரே முக்கிய காரணம்… உலக அரங்கில் 180 கரன்சிகள் இருந்தபோதும் 90 சதவீத வர்த்தகம், அமெரிக்க டாலர்களாலேயே மேற்கொள்ளப்படுவது தான் இதற்கு அடித்தளம்… அதற்கு நேரெதிராக அமைந்தது இந்திய-ஈரான் உறவு… ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாயிலேயே பரிவர்த்தனை என்பது தான் அது… அதாவது இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் இந்திய ரூபாய்களை வைத்து இந்தியாவிலேயே தனது தேசத்திற்கு தேவையானவற்றை ஈரான் கொள்முதல் செய்துக்கொள்ளும்… இதன் மூலம் அமெரிக்காவின் வர்த்தக வலைப்பின்னலிருந்து இந்தியா-ஈரான் தனித்து நிற்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா. மேலும் ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயையை இறக்குமதி செய்யக்கூடாது என்றும் கெடு விதித்தது. அந்த கெடுவுக்கு இன்றே கடைசிநாள். கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் ஈரான் 3வது இடத்தில் உள்ளது… தற்போது அமெரிக்கா கொடுத்த 6 மாத கெடு இன்றுடன் நிறைவு பெறுவதால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யப் போகிறதா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
ஒருவேளை அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்று ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயையை இறக்குமதி செய்ய தவறினால், இந்தியாவுக்கு ஏறக்குறைய 11 சதவீத கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும்… இதனால் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்… ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு காசு ஏற்றமடைந்தாலே நமக்கு அது பெரும் சுமை தான். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு எடுக்கக்கூடிய முடிவில் தான் பெட்ரோல், டீசல் விலை உயருமா? இல்லை அப்படியே நீடிக்குமா என்பது தெரியவரும். நியூஸ் ஜெ செய்திகளுக்காக முகம்மது சாலிஹ்.
Discussion about this post