மெட்ரோ தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வெளிநபர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிஐடியூ உடன் இணைந்து புதிய சங்கம் துவங்கிய 8 பணியாளர்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்தும் மெட்ரோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக இந்த வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ராஜரத்தினம், வி.கே.சிங் மற்றும் சிஐடியூ உடன் இணைந்த மெட்ரோ ரயில் ஊழியர் சங்க நிர்வாகிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் இந்தப்பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மெட்ரோ ரயில் ஊழியர் சங்கத்தின் சார்பில் சிஐடியூ தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், மெட்ரோ ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post