நாமக்கல்லில் குழந்தைகளை விற்றதாக இரண்டு பெண்கள் உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, குழந்தைகளை விற்றதாக பர்வீன், நிஷா, அருள்சாமி ஆகிய 3 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கருமுட்டை வாங்கி விற்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பாலாமணி, செல்வி , பாண்டியன் ஆகியோரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு கருமுட்டைகளை வாங்கி விற்றுள்ளது தெரியவந்தது. அப்படியும் குழந்தை பெற தகுதியில்லாத தம்பதிகளுக்கு அமுதாவிடம் கூறி லட்சக் கணக்கில் பெற்றுக் கொண்டு குழந்தைகளை விற்றுள்ளனர். அந்த வகையில் பாலாமணியும், செல்வியும் 6 குழந்தைகளை விற்றுள்ளனர்.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றிய பாண்டியன் ஒரு குழந்தையை இரண்டரை லட்சத்துக்கு விற்றுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post