நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா என்பவர் தரகராக இருந்து குழந்தைகளை வாங்கி, விற்று வந்துள்ளார். கடந்த 30 வருடங்களாக தங்கு தடையின்றி இந்த விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. செவிலியர் அமுதா, குழந்தை விற்பனை தொடர்பாக தம்பதியிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் ஓமலூர் மற்றும் கொல்லிமலை பகுதிகளில் 3 குழந்தைகளை பெற்று விற்பனை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொல்லிமலை செம்மேடு பகுதியில் இரண்டு குழந்தைகளை விலைக்கு பெற்று செவிலியர் அமுதா மூலம் விற்பனை செய்ததாக முருகேசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.மேலும் ஈரோடு தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் என்பரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராசிபுரம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4500 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்க 10 நபர்கள் அடங்கிய 10 குழுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், கொல்லிமலையில் வீட்டில் பிறந்த குழந்தைகளின் விவரங்களையும் தத்துக்கொடுத்த ஆவணங்களையும் ஆய்வு செய்ய 5 நபர்கள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post