தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்துவருகிறது. இதனால் அந்தப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த செய்தி தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் ஈரப்பத காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெல்லை, தேனி, கோவை மற்றும் வேலூரில் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் வெப்பநிலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Discussion about this post