10 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சாசன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் கல்வியில் 10 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் இடங்கள் கூடுதலாக உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், 10 சதவீத இடஒதுக்கீட்டுக்காக மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் கூடுதல் இடங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதலை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 766 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 983 இடங்கள் வரும் 2019-20 கல்வி ஆண்டில் ஏற்படுத்தப்படவுள்ளன.
Discussion about this post