ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறும் புகைப்பட கண்காட்சி பார்வையாளர்களை வரலாற்றின் காலகட்டத்திற்கு அழைத்து செல்லும் விதமாக அமைந்துள்ளது.
1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தை குலைக்கும்வகையில் ஜெனரல் டயர் என்பவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடும் அதில் உயிரிழந்தவர்களும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் சுவடுகளாக விளங்குகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டின் நூற்றாண்டு, இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தென்னிந்தியாவின் ஒரே அருங்காட்சியகமான மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இதையொட்டி புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
தேசத்தந்தையாக போற்றப்படும் காந்தியடிகள், மதுரைக்கு 5 முறை வருகை தந்துள்ளார். இந்த வருகையை போற்றும்வகையில் ராணி மங்கம்மாள் அரண்மனை காந்தி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நினைவை போற்றும்வகையில், நடைபெற்றுவரும் புகைப்பட கண்காட்சி, பயன்பெறும் வகையில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
புகைப்பட கண்காட்சியில் டெல்லிக்கு அடுத்தாற்போல, ஜாலியன் வாலாபாக் தொடர்பான 40க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெனரல் டயர் நின்று சுட்ட இடம், மக்கள் ஓடி ஒளிந்த இடம், குண்டுகள் புதைந்த சுவர் என அனைத்து இடங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தகங்கள் வாயிலாக பாடங்களை பயில்வதை காட்டிலும் இத்தகைய கண்காட்சிகளை காண்பது நல்ல அனுபவத்தை தருவதாக கண்காட்சியை பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post