தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் இன்னும் 4 நாட்களில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்ட பயிற்சி கடந்த மாதம் 24ம் தேதியும் இரண்டாவது கட்டமாக கடந்த 7ம் தேதியும் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னையில் 16 இடங்களில் நடைபெற்ற இந்த பயிற்சியில், மின்னணு வாக்கு இயந்திரங்கள், வாக்காளர் பெயர் சரிபார்ப்பு, தணிக்கை இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எல்.ஈ.டி. ஒளித்திரை மூலமாகவும், நேரடியாகவும் ஊழியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மொத்தம் 20 ஆயிரத்து 271 தேர்தல் அலுவலர்கள் இன்றைய பயிற்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு பயிற்சி குறித்த கையேடு வழங்கப்பட்டது. நான்காவது மற்றும் இறுதிகட்ட பயிற்சி வகுப்புகள் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது.
Discussion about this post