கர்நாடக அரசு காவிரியில் நான்கு அணைகளை கட்டுவதற்கு ஆட்சேபணை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறியவர் கருணாநிதி என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தேனி மாவட்டம் கருமாத்தூரில் அவர் பிரசாரம் செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை சட்டப் போராட்டத்தின் மூலம் அரசாணையில் வெளியிட செய்தார் என்று கூறினார்.
உசிலம்பட்டியில் பிரசாரம் செய்த துணை முதலமைச்சர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த ஏழை மக்களுக்கான கான்க்ரீட் விடுகள் திட்டத்தில் தற்போது வரை, 6 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 2023 ஆம் ஆண்டுக்குள் ஏழை மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்து இத்திட்டம் முழுமைப்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
தேனி மாவட்டம் எழுமலையில் வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர், அதிமுக அரசு கொண்டு வந்த, நலிவடைந்த ஏழை விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு திமுக நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கியது என்று கூறினார். தேர்தலுக்கு பின்னர் தடை நீக்க உத்தரவு பெற்று, திட்டம் முழுமையாக செயல்படுத்தி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post