சமூகத்தின் மனப்பான்மை, கருத்தியலை செம்மைப் படுத்தி, மனித வாழ்வை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் துடுப்பாக இருப்பதே கலை என்று சொல்வர். அந்த கலை எனும் துடுப்பை லாவகமாகப் பிடித்து, தமிழ் சினிமா ரசிகனின் மனநிலையை மேம்படுத்திய இயக்குநர்களில், மகேந்திரனுக்கு முக்கிய இடமுண்டு.
சிவகங்கை மாவட்டம் இளையங்குடியில் 1939, ஜுலை 25ஆம் தேதி பிறந்த அலக்சாண்டர் என்னும் மகேந்திரன், திரைத்துறைக்குள் வந்ததே, அவரின் திரைப்படங்களில் கையாளப்பட்டது போன்று அழகான கதைதான். அழகப்பா கல்லூரியில் பிஏ படித்துக்கொண்டிருந்தபோது, ஆண்டுவிழாவில் பேசி அங்கு வந்திருந்த எம்.ஜி.ஆரை கவர்ந்தார். பின்னாளில் சென்னையில் எம்.ஜி.ஆரை சந்தித்த மகேந்திரனுக்கு தன் வீட்டிலேயே தனி இடம் கொடுத்து, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை எழுதச் சொன்னார். பிறகு எம்ஜிஆர் நடித்த காஞ்சித் தலைவன் திரைப்படத்தில் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்து சினிமா பயிலத் தொடங்கினார்.
அதன்பிறகு 1966 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த நாம் மூவர் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி திரைக்கதையாசிரியராக தன் திரைவாழ்க்கையைத் துவங்கினார். பிறகு துக்ளக் பத்திரிகையில் பணியாற்றியபோது இவர் எழுதிய இரண்டில் ஒன்று நாடகம், பின்னாளில் சிவாஜிகணேசன் நடிப்பில் தங்கப்பதக்கம் திரைப்படமாகத் தயாரானது.
1978 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார். முரடனான அண்ணனுக்கும் மலரை போன்ற மென்மையான தங்கைக்கு இடையேயான பாசத்தை உணர்ச்சிப்பூர்வமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.
அடுத்ததாக உதிரிப் பூக்கள் திரைப்படத்தைக் கொடுத்து திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த படம் அவரின் சிறந்த படங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்த மாதிரி ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்பதை ஜானியின் அர்ச்சனா கதாபாத்திரம் மூலம் ஏங்க வைத்தார். நடிகை சுகாசினியை அறிமுகம் செய்து இவர் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் மூன்று தேசிய விருதுகளையும் தமிழக அரசின் மூன்று விருதுகளையும் வென்றது. மெட்டி, நண்டு, அழகியக் கண்ணே போன்ற தமிழ்போற்றும் பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்த மகேந்திரனின் இயக்கத்தில், கடைசியாக 2006ஆம் ஆண்டு சாசனம் திரைப்படம் வெளியானது.
பல நல்ல படங்களை கொடுத்த மகேந்திரன், தெறி படம் மூலம் தான் சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்தார். தனது உடல்மொழி , பார்வை மூலம் வில்லத்தனத்தை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
தொடர்ந்து சீதக்காதி, பேட்ட போன்ற படங்களிலும் மகேந்திரன் நடித்துள்ளார். இயக்குனர் மகேந்திரனின் இழப்பு, தமிழ் திரையுலகிற்கு மாபெரும் இழப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…
Discussion about this post