கொடநாடு விவகாரத்தில் தன்னை சிக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட சதி அம்பலமாகியிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், கொடநாடு விவகார சதி பின்னணியில் ஸ்டாலின் இருக்கலாம் என்ற சந்தேகம் மக்களிடம் இருப்பதாகக் கூறினார்.
மேலும் அரை மற்றும் ஒரு சதவீத வாக்கு வங்கியை கொண்ட கூட்டணி திமுக கூட்டணி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில், அரக்கோணம் மக்களவை பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். ஸ்டாலினுக்கு எதுவும் கிடைக்காததால் தன்னையும், கூட்டணி கட்சிகளையும் விமர்சிப்பதாக அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் முத்துக்கடை பகுதியில், அரக்கோணம் மக்களவை பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், ஸ்டாலினை முதலமைச்சராக விடமாட்டேன் என்று கூறிய வைகோவையே கூட்டணியில் வைத்திருக்கும் திமுகவுக்கு, அதிமுக கூட்டணியை விமர்சிக்க என்ன தகுதியுள்ளது என்று கேள்வி எழுப்பினார். குழந்தைகள் கல்வி பயில அனைத்து உதவிகளையும் அதிமுக அரசு செய்து வருவதாக குறிப்பிட்டார்.
அப்போது அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கும், அதிமுகவை உடைப்பதற்கும் சதி திட்டம் தீட்டிய துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். சோளிங்கர் பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 20 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Discussion about this post