இந்து கடவுள் குறித்து தவறாக விமர்சித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார். மேலும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீனை பெற்று கொள்ளலாம் என்றும், 3 வாரம் தினமும் வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என புதிய மனுவை பாரதிராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால், கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி, வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கைது செய்யப்பட நேரிடும் என்ற அச்சம் பாரதிராஜாவுக்கு இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக பாரதிராஜா தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், முழு விவரங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
Discussion about this post