சித்திரங்குடி கண்மாய் வறண்டதால் அங்குள்ள பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி, பறவைகள் வருகை குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்களில் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடியும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கூறைக்கிடா, வில்லோ வார்பலர், கரண்டி மூக்கன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வருகின்றன.
6 மாதங்கள் வரை தங்கி இனபெருக்கம் செய்த பிறகு தாய்நாடுகளுக்கு பறவைகள் திரும்புவது வழக்கம். இவற்றுடன் நீர்காகம், மீன்கொத்தி, ஒற்றைவால் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் தங்கி கண்மாய்க்குள் இரைதேடுவது வழக்கம். பறவைகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள். இதனால் ஆண்டுதோறும் 6 மாதங்கள் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் களைகட்டுவது வழக்கம்.
இந்நிலையில் சித்திரங்குடி கண்மாய்க்கான நீர் வரத்துகள் தூர்த்துவிட்டதாலும், போதிய மழை பெய்யாததாலும் தண்ணீர் வரத்து தடைபட்டு கடந்த சில ஆண்டுகளாக கண்மாய் நிரம்பாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
போதிய மழை, நீர் வரத்து இல்லாததால், பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காட்சி அளிப்பதாகவும், பறவைகள் வருகையும் குறைந்துள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால் இரை கிடைக்காமல் தவிக்கும் பறவைகள், அருகில் உள்ள வயல்வெளிகள், சிறிய கண்மாய் கரைகளில் தஞ்சமடைவதாக தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறையத் துவங்கி உள்ளதாக தெரிகிறது. அழிவின் விளிம்பில் உள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post