மார்ச் 16ம் தேதி, ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாஷாவின் நினைவு நாளன்று, ‘கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உவமையாய் ஆனாயே’ என அவரது குடும்பத்தினர் கொடுத்த விளம்பரத்தால், திமுகவினர், சாதிக் பாஷா மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா, சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில், சாதிக் பாஷாவும் சிபிஐ விசாரணைக்கு உள்ளானார்.
இந்தநிலையில், 2011 மார்ச் 16ல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு சாதிக் பாஷா தற்கொலை கொண்டார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கருதப்படுகிறது. இன்றுவரை விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வியாகவே அவரது மரணம் நீடிக்கிறது.
இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்பு, திமுகவையே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சாதிக் பாட்சாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான மார்ச் 16ம் தேதி, “கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே” என்றும், இப்படிக்கு உன் முகம் கூட அறிந்திடா உன் பிள்ளைகள் என்றும் நாளிதழ்களில் அவரது குடும்பத்தினர் விளம்பரம் செய்தனர். திமுகவில், அதுவும் ஆ.ராசாவின் நண்பராக இருந்த சாதிக் பாஷா, அந்த நட்பின் காரணமாகவே உயிரைவிட்டது போல், அவருடைய குடும்பத்தினர் கூறியிருந்ததால், இந்த விளம்பரம், பல தரப்பிலும், மிகுந்த கவனத்தை பெற்றது.
இந்நிலையில், இந்த விளம்பரத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த திமுகவினர், சாதிக் பாஷாவின் மனைவி சென்ற கார் மீது, கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சாதிக் பாஷாவின் மனைவி ரேகா பானு புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரியுள்ளார்.
Discussion about this post